rajasthan pt
இந்தியா

70 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பின் 90 வயதில் திருமணம்..!

70 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பின் 90 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள். இணையத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த செய்தியின் பின்புலம் என்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமமான கலந்தரைச் சேர்ந்தவர்கள் ராமா பாய் கராரி (95) மற்றும் ஜீவலி தேவி (90). ஆனால், இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் எட்டு குழந்தைகள் மற்றும் பல பேரக்குழந்தைகள் உள்ளனர். ஏழு தசாப்த காதல் உறவுக்குப் பிறகு, இந்த ஜோடிக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.

70 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள், தங்களின் 90 ஆவது வயதில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி, தங்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகளின் முன்னிலையில் பிரம்மாண்டமாக உற்சாகத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

திடீரென இவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு காரணம், அவர்களது பழங்குடியினர் சமுதாயத்தில் இருக்கும் ஒரு கட்டுப்பாடுதான். முறைப்படி திருமணம் செய்து கொள்ளாத தம்பதியினர் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற கட்டுப்பாடுதான் அது.

குழந்தைகளை பொறுத்தவரை அனைத்து வகையான சொத்துக்களை அனுபவிக்க உரிமை உண்டு. இருப்பினும், திருமணம் போன்ற முக்கிய விழாக்களின் இவர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகளும் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, இருவரையும் திருமணம் செய்துகொள்ளும்படி இந்த தம்பதியினரின் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், டிஜே இசை, கிராமவாசிகளின் நடனம் என பாரம்பரிய முறைப்படி தடபுடலான விருந்தோடு இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றது.

இதுகுறித்து தம்பதியரின் மகன் காந்தி லால் கராரி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

"அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். முழு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தோம். ஜூன் 1 ஆம் தேதி ஹால்டி விழா நடந்தது. ஜூன் 4 ஆம் தேதி திருமண விழா நடைபெற்றது, முழு கிராமமும் அதைக் கொண்டாட ஆரவாரத்தோடு வந்தது. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நாங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் இருக்கும் தனித்துவமான நாடா பாரம்பரியத்தின் கீழ் இந்த ஜோடிகள் இத்துனை காலம் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கத்தின் கீழ், எந்தவொரு பழங்குடி ஆணோ அல்லது பெண்ணோ திருமணம் செய்து கொள்ளாமலேயே தங்களுக்கு விருப்பமான மற்றொரு நபருடன் வாழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.