இந்தியா

ராஜஸ்தான் : வயலில் வெட்டுக்கிளிகளுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு எம் எல் ஏ!!

kaleelrahman


அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் முகாம்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ராஜஸ்தான் எம்.எல்.ஏக்கள் சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.எல்.ஏ ஒருவர் பிகானேர் கிராமத்தில் தனது வயலில் வெட்டுக்கிளிகளை விரட்டுவதில் மும்முரமாக உள்ளார்.


கடந்த இரண்டு வாரங்களாக, ராஜஸ்தானில் ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு அணிகளாக பிரிந்துள்ளனர், இதில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் சுயேச்சைகள் உட்பட, பலர் முதலமைச்சர் கெலாட்டை ஆதரிக்கின்றனர், மீதமுள்ளவர்கள் சச்சின் பைலட்டுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளனர். ஆட்சிக்கு நெருக்கடி வந்ததிலிருந்து, இருஅணி ஆதரவு எம்.எல்.ஏக்களும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், இவர்கள் தரமான உணவை உண்டு திரைப்படங்களை பார்த்து பொழுதை கழிக்கின்றனர்.


இதற்கிடையில், பிகானேரின் ஸ்ரீ துங்கர்கர் தொகுதியைச் சேர்ந்த முதல் முறையாக எம்.எல்.ஏ.வான கிர்தாரிலால் மஹியா (62) தனது வயலை வெட்டுக்கிளிகளிலிருந்து பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்தது மக்கள் பணியாற்றத்தான், மாறாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குள் உட்கார்ந்து கொள்வதற்காக அல்ல.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருக்கும் ஹோட்டலின் பெயர் கூட தனக்குத் தெரியாது  வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் சக விவசாயிகளின் குறைகளையும் கவனிக்கிறேன். பருத்தி, நிலக்கடலை அல்லது பிற பயிர்களாக இருந்தாலும், வெட்டுக்கிளி தாக்குதலை அடுத்து விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் மும்முரமாக உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்


விவசாயியான கிர்தாரிலால், 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக போட்டியிட்டு, பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்து 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.