இந்தியா

ராஜஸ்தான்: அடுத்தடுத்து வெடித்த 6 சிலிண்டர்கள்.! விபத்தில் 4 பேர் பலி ; 16 பேர் படுகாயம்

webteam

ராஜஸ்தான் ஜோத்பூரில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.

ராஜஸ்தான் ஜோத்பூரின் கிர்த்தி நகர் பகுதியில் ஒரே நேரத்தில் பல எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பல பேர் பலியாகியனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு, இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் கிர்த்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 6 எல்பிஜி சிலிண்டர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. சிலிண்டர்கள் சப்ளையர் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர்களை நிரப்பும் போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படும் நிலையில், இந்த கோர விபத்தில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் என நான்கு பேர் பலத்த தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தையடுத்து, அருகிலிருந்த வீடு ஒன்று தீப்பிடித்து அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும், சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் வாகனமும் விபத்தில் சேதமடைந்ததாக தெரிகிறது. மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, வீட்டில் இருந்து பல சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் நிர்வாக அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்த அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.