ராஜஸ்தானில் 7 மாதக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதித்தது ராஜஸ்தான் ஆல்வார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அல்வார் மாவட்டத்திலுள்ள லஷ்மன்கார்க்கில் இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 9ம் தேதி நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தையை அப்போது உறவினர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த உறவினரிடம் இருந்து பக்கத்துவீட்டு இளைஞர் குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார். பெற்றோர் வந்து கேட்டதற்கு, குழந்தையை அந்த இளைஞர் எடுத்துச் சென்றாக கூறியுள்ளனர். பின்னர், அவர்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்தக் குழந்தை அழுத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் குழந்தை அல்வாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட சோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதனை கேட்டதும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து அல்வார் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்புக்கு பின்னர் அரசு வழக்கறிஞர் குல்தீப் சிங் கூறுகையில், ‘ராஜஸ்தானில் முதன்முறையாக இப்போதுதான் மரண தண்டனை அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. நாடு முழுவதும் இது மூன்றாவது சம்பவம் ஆகும்’ என்றார். மேலும், விரைவு நீதிமன்றத்தின் மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும், 13 விசாரணைகளிலே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ராஜஸ்தான் சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை அளிக்க அனுமதிக்கும் வகையில் அந்தச் சட்டம் வழி வகுத்திருந்தது. முதன் முதலாக இந்தச் சட்டத்தை மத்திய பிரதேச அரசுதான் கொண்டு வந்தது. இரண்டாவது மாநிலமாக ராஜஸ்தான் கொண்டு வந்துள்ளது. சட்டம் இயற்றப்பட்ட பின்னர், முதல் வழக்காக இந்தச் சம்பவத்தில் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.