ராஜ் தாக்கரே எக்ஸ் தளம்
இந்தியா

ஒளரங்கசீப் விவகாரம் | ”வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதை நிறுத்துங்கள்” - ராஜ் தாக்கரே!

”வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதை நிறுத்திவிட்டு, வரலாற்றுப் புத்தகங்களை ஆராயுங்கள்” என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Prakash J

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் நகரில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு எதிரான போராட்டங்களைக் கருத்தில் கொண்டும், வரவிருக்கும் பண்டிகைகளின்போது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25 முதல் ஏப்ரல் 8 வரை இந்த தடை உத்தரவுகள் அமலில் இருக்கும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

ராஜ் தாக்கரே

இந்த நிலையில், ”வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதை நிறுத்திவிட்டு, வரலாற்றுப் புத்தகங்களை ஆராயுங்கள்” என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவாஜி பூங்காவில் வருடாந்திர குடி பத்வா பேரணியில் பேசிய அவர், “சிவாஜிக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் சமூக-அரசியல் சூழ்நிலைகள் வேறுபட்டன. இன்றைய காலத்தின் உண்மையான பிரச்னைகளை நாம் மறந்துவிட்டோம். ஒரு திரைப்படத்தைப் பார்த்த பிறகு விழித்தெழுந்த இந்துக்கள் எந்தப் பயனும் அடையவில்லை. விக்கி கௌஷலால் சம்பாஜி மகாராஜின் தியாகத்தைப் பற்றியும், அக்ஷய் கன்னாவால் ஔரங்கசீப்பைப் பற்றியும் நீங்கள் கற்றுக்கொண்டீர்களா? வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதை நிறுத்திவிட்டு, வரலாற்றுப் புத்தகங்களை ஆராயுங்கள். தங்கள் சுயநல அரசியல் ஆசைகளுக்காக மக்களைத் தூண்டிவிடுபவர்கள் வரலாற்றைப் பற்றி கவலைப்படுவதில்லை. மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு முன்னேற முடியாது. மதம் என்பது உங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கும்போது அல்லது கலவரங்களின்போது மட்டுமே ஒரு இந்து இந்துவாக அடையாளப்படுத்தப்படுகிறார்; இல்லையெனில், இந்துக்கள் சாதியால் பிரிக்கப்படுகிறார்கள்” எனப் பேசினார்.