இந்தியா

கொரோனா எச்சரிக்கை : திருமணத்தை ஒத்திவைத்த ராய்ப்பூர் துணை ஆட்சியர்

webteam

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராய்ப்பூர் துணை கலெக்டர் ஷீட்டல் பன்சால், தனது திருமணத்தை ஒத்திவைத்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமூத் பகுதியைச் சேர்ந்தவர் ஷீட்டல் பன்சால். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ராய்ப்பூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஆயுஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் ஷீட்டல் பன்சால் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திட்டமிட்டப்படி எங்கள் திருமணத்தை நடத்தியிருந்தால் நாங்கள் தவறான முன்னுதாரணமாக ஆகியிருப்போம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸால் சுமார் 190 நாடுகளில் இயல்பு நிலைமை முடங்கியுள்ளது. இதுவரை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா,‌ ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளாலேயே இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்தியாவை பொருத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை அதிக கூட்டம் கூடாமல் நடத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.