இந்தியா

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

webteam

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வரும் 5-ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கிழக்கு திசைக் காற்றும் மேற்கு திசைக் காற்றும் தமிழகப் பகுதியில் சந்தித்துக் கொள்வதால் மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சென்னையில் அசோக் நகர், கிண்டி, மத்திய கைலாஷ், ஆலந்தூர், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் இரவு பலத்தமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான மாம்பட்டு, இந்திரா நகர், அம்மையப்பட்டு, சென்னாவரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் ஒரு மணி நேரம் கனமழை பொழிந்தது.

நாகை மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. புத்தாண்டு தினத்தன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல், அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தாமரைகுளம், காட்டுப்பிரிங்கியம், வாரணவாசி‌ ஆகிய இடங்களில் மழை பெய்தது.