இந்தியா

நேற்று கேஸ் மானியம்.. இன்று ரயில் டிக்கெட் மானியம் - மத்திய அரசுக்கு பரிந்துரை

நேற்று கேஸ் மானியம்.. இன்று ரயில் டிக்கெட் மானியம் - மத்திய அரசுக்கு பரிந்துரை

webteam

ரயில் கட்டணங்களில் வழங்கப்படும் மானியத்தை பயணிகள் தாமாக முன் வந்து விட்டுத் தரும் நடைமுறையை கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியின் முதல் 100 நாட்களில் செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் கொண்ட அறிக்கையில் ரயில்வே இது போன்ற ஒரு பரிந்துரையை அளித்திருப்பதாக அத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை பயனாளிகள் தாமாக முன் வந்து விட்டுத் தரும் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், அதே போன்ற திட்டத்தை ரயில்வே துறையிலும் செயல்படுத்தும் யோசனை‌ முன்வைக்கப்பட்டுள்ளது. 

ரயில் பயணிகளுக்கு ஆகும் செலவில் 53 சதவிகிதம் மட்டுமே அவ‌ர்களிடம் இருந்து பெறப்படுவதாகவும் மீதம் 47 சதவிகித தொகை மானியமாக வழங்கப்படுவதாகவும் ரயில்வே அதிகாரி தெரிவித்தார். இதனால் ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, தாங்கள் அளித்துள்ள பரிந்துரை ஏற்‌கப்படும் பட்சத்தில் அது ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த யோசனை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அளிக்கப்பட்ட போதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அது ஏற்கப்படவில்லை என்றும் ரயில்வே உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.