இந்தியா

தொடர் விபத்துக்கள்: ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ராஜினாமா செய்ய விருப்பம்

webteam

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தொடர் ரயில் விபத்துக்களுக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து எதிர்பாராமல் நடந்த விபத்துக்கள் வேதனை தருவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்களுக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக மோடியிடம் கூறியதாகவும், ஆனால் மோடி தன்னைக் காத்திருக்குமாறு கூறியதாகவும் சுரேஷ்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளில் ரயில்வேத் துறையின் நலனுக்காக ரத்தத்தையும் வியர்வையையும் அர்ப்பணித்ததாகவும் சுரேஷ்பிரபு கூறியுள்ளார். விபத்துக்களுக்குப் பொறுப்பேற்று ரயில்வே வாரியத் தலைவர் பொறுப்பில் இருந்த வினய் மிட்டல் தனது பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் முசாபர் நகர் ‌அருகே உத்கல் எக்ஸ்ப்ரஸ் ரயில் கவிழ்ந்து வி‌பத்துக்குள்ளானதில் 23‌பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 75க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

ஆருய்யா பகுதியில் அதிகாலை இரண்டரை மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 6 க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. கோரக்பூர் குழந்தைகள் உயிரிழப்பு, ரயில் கவிழ்ந்து விபத்து என அடுத்தடுத்து நடைபெற்று வரும் சோக நிகழ்வுகள் தங்களை கவலை கொள்ளச் செய்துள்ளதாக உத்தரப்பிரதேச பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சுரேஷ்பிரபு தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து, அவரை மோடி காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்.