மஹா கும்ப மேளாவுக்கு ரயில்களில் இலவசமாகச் செல்லலாம் என வெளியான தகவலை இந்திய ரயில்வே மறுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 வரை மஹா கும்பமேளா நடைபெறவுள்ளது. தேசத்தின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கும்பமேளாவிற்குச் செல்ல வசதியாக ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படாது என சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்படுகின்றன. இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய ரயில்வே, கும்பமேளாவிற்காக இலவசமாக ரயில்களில் பயணிக்கலாம் என ஒருபோதும் அறிவிக்கவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும், ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.