ராகுல் காந்தி
ராகுல் காந்தி file image
இந்தியா

கோலாரில் இருந்து பரப்புரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி! 'ஜெய் பாரத்' பேரணியில் பங்கேற்கிறார்!

Prakash J

கர்நாடகா மாநிலத்தில், 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் (மே) 10ஆம் தேதி, ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். தொடர்ந்து அங்கு நடைபெறும் 'ஜெய் பாரத்' பேரணியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.

Rahul Gandhi

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடரப்பட்டு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மார்ச் 23ஆம் தேதி, சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. ராகுலுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.

ராகுல் காந்தி

தொடர்ந்து, அவருடைய எம்.பி. பங்களாவும் காலி செய்ய உத்தரவிடப்பட்டது. தற்போது அந்த எம்.பி. பங்களாவைக் காலி செய்து அவருடைய தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி வீட்டில் அவர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ராகுல், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடும் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில்தான் இன்று, கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார். இன்று நடைபெறும் பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவின் பொறுப்பு பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ராகுல் காந்தி

கோலாரில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற இருந்த இந்தப் பேரணி, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏப்ரல் 9ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு, இறுதியாக இன்று (ஏப்ரல் 16) நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.