இந்தியா

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியே நீடிப்பார் - செயற்குழு தீர்மானம்

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியே நீடிப்பார் - செயற்குழு தீர்மானம்

webteam

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ்‌ கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் அந்தக் கட்சி வெறும் 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. வயநாடு தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்றாலும், தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியைச் சந்தித்தார். ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றிலும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. 

இந்நிலையில் டெல்லியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் உயரதிகாரம் கொண்ட, காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தை அவர் கொடுத்தார். ஆனால், இதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தையும் ராகுலுக்கு வழங்கி காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தோல்வி குறித்து ஆராய ராகுல்காந்தி தலைமையில் 3 மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடைபெற்றது.