இந்தியா

வேலைவாய்ப்பை அதிகரிக்க என்ன வழி? - ராகுல் பதில்

வேலைவாய்ப்பை அதிகரிக்க என்ன வழி? - ராகுல் பதில்

webteam

விவசாயிகளும் விவசாயமும் இல்லாத நாடு வலிமையானதாக இருக்காது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்துள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் வந்த ராகுல்காந்தி அங்கிருந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்றார். 

அங்கு கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் சேலன்ஞ் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் கலந்துரையாடினார். அங்கு மாணவிகள் பல்வேறு நடப்புகள் குறித்து ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தற்போது செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். 

அப்போது பேசிய ராகுல்காந்தி, “அதிக வேலைவாய்ப்பை தரக்கூடிய சிறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கபட்டுள்ளன. ஜிஎஸ்டியால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் நாடு முழுவதும் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அரசு தீர்வு காணவில்லை. மத்திய பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார். 

வேலைவாய்ப்பை அதிகரிக்க காங்கிரஸ் என்ன வழிவகை வைத்துள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். சிறு, நடுத்தர தொழில்துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க திட்டமிட்டுள்ளோம். வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான திட்டங்கள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இந்த தேர்தலில் முக்கிய பிரச்னையே இளைஞர்கள் வேலையின்மையை தவிர்ப்பதுதான். விவசாயிகளும் விவசாயமும் இல்லாத நாடு வலிமையானதாக இருக்காது.” எனத் தெரிவித்தார்.