முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்யும் நடைமுறை சட்ட விரோதமானது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்.
முத்தலாக் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், முத்தலாக் நடைமுறையில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அது கூறியுள்ளது. 6 மாதத்திற்குள் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறிய உச்சநீதிமன்றம் அதுவரையில் முத்தலாக் முறைக்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்காக போராடிய பெண்களைப் பாராட்டுவதாக ட்விட்டரில் ராகுல் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்பதாகவும், பெண்களின் உரிமையை நிலைநிறுத்தும் தீர்ப்பு இது என்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.