காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி சிறப்பாக வழி நடத்துவார் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 87-ஆவது தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நேரு குடும்பத்தில் இருந்து வந்த 6-ஆவது காங்கிரஸ் தலைவர் என்ற பெருமையும் ராகுல்காந்திக்கு கிடைத்துள்ளது.
இவ்விழாவில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “காங்கிரஸின் வரலாற்றில் இன்று முக்கியமான நாள். இது உணர்ச்சிமிக்க தருணமாக உள்ளது. சோனியா 19 வருடங்களாக கட்சியை சிறப்பாக வழி நடத்தினார். சோனியாவின் வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் 10ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் கட்சியை ராகுல் சிறப்பாக வழி நடத்துவார். இடையூறுகள் நிறைந்த தருணத்தில் ராகுல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். சிக்கல்களை ராகுல் காந்தி திறம்பட எதிர்கொள்வார்” என மன்மோகன் சிங் தெரிவித்தார்.