ராகுல் காந்தி எக்ஸ் தளம்
இந்தியா

”ஒரு கையில் அரசியலமைப்பு சட்டம், மறு கையில் மனு ஸ்மிருதி” மக்களவையில் ஆக்ரோசமாக பேசிய ராகுல் காந்தி!

மக்களவையில் அரசியல் சாசனம் குறித்து ராகுல் காந்தி, இன்று உரையாற்றினார்.

Prakash J

தொடங்கிய நாள் முதல் முடங்கும் நாடாளுமன்றம்..

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது வருகிறது. டிசம்பர் 20ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில், மத்திய அரசு 16 மசோதாக்களை நிறைவேற்ற பட்டியல் இட்டுள்ளது. ஆனால், கடந்த நாட்களில் அதானி விவகாரத்தை காங்கிரஸ் கட்சியும், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் விவகாரத்தை பாஜகவும் எடுத்துக் காட்டி அமளியில் ஈடுபட்டதால் அவைகள் மொத்தமாக முடங்கின.

கன்னி உரையில் தெறிக்கவிட்ட ப்ரியங்கா காந்தி!

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மக்களவையில் இரண்டு நாட்கள் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார்கள். அந்த வகையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியான பிரியங்கா காந்தி. தனது கன்னி உரையை ஆற்றினார். அவருடைய முதல் உரையே எதிர்க்கட்சிகளை ஆச்சர்யப்பட வைத்தது. மேலும் அவருடைய சகோதரரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியைப் பாராட்டியிருந்தார்.

அரசியலமைப்பு சட்டம் குறித்து பாஜக குறித்து ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி!

இந்த நிலையில், மக்களவையில் அரசியல் சாசனம் குறித்து ராகுல் காந்தி, இன்று உரையாற்றினார். அப்போது, அவர் ஒரு கையில் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தையும், மறு கையில் மனு ஸ்மிருதி புத்தகத்தை உயர்த்தி காட்டியும் பேசினார்.

பிரியங்கா காந்தி

அவர், “உங்கள் தலைவரின் வார்த்தைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஏனெனில் அரசியலமைப்பைப் பாதுகாப்பது பற்றி நாடாளுமன்றத்தில், நீங்கள் பேசுவது ​​சாவர்க்கரை கேலி செய்வதுபோன்றும், அவதூறாகவும் பேசுவதுபோல் உள்ளது.

சாவர்க்கர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றியும் இந்தியா எவ்வாறு இயங்க வேண்டும் என்பது பற்றியும் ஆர்எஸ்எஸ்ஸை உருவாக்கிய தலைவர் சாவர்க்கர் கூறியிருப்பதை நான் இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். ஏனெனில், இங்கு ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ்தான் மூலமாக இருக்கிறது. ’அரசியலமைப்பு பற்றி கூற வேண்டும் எனில், அதில் இந்தியர்கள் குறித்து எதுவும் கிடையாது. நமது இந்து தேசத்தில் வேதங்களுக்குப் பிறகு மிகவும் மதிப்புமிக்கதாக இருப்பது மனுஸ்மிருதிதான். நமது கலாசாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறையை இது பிரதிபலிப்பதாக இருக்கிறது.

சாவர்க்கரை கேலி செய்கிறீர்களா?

மனுஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தை குறியீடாக இருக்கிறது' என்றுதான் சாவர்க்கர் கூறியுள்ளார். அவரது எழுத்துகளில் அரசியலமைப்புச் சட்டம் குறித்து எதுவும் இல்லை. அதாவது, ’அரசியலமைப்புச் சட்டப் புத்தகம், மனுஸ்மிருதி புத்தகத்தால் முறியடிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இப்போது கேள்வி என்னவென்றால், ஆளும் கட்சியாக இருக்கும் நீங்கள், அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிறீர்கள். அப்படியென்றால், நீங்கள் உங்கள் தலைவர் சாவர்க்கரை கேலி செய்கிறீர்களா? அவருடைய எழுத்தை அவமானப்படுத்துகிறீர்களா” எனக் கேள்வியெழுப்பினார்.

ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டியது போல.. 

நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களைப் புகழத் தயங்குகிறது பாஜக. பெரியார், அம்பேத்கர், காந்தி என அனைத்து தலைவர்களையும் நாங்கள் வணங்குகிறோம். எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அம்மாநில தலைவர்களை வணங்கிப் போற்றுகிறோம். பண்டைய இந்தியா இல்லாமல் நவீன இந்தியாவின் அரசமைப்பை எழுத முடியாது. காந்தி, நேரு, அம்பேத்கரின் எண்ணங்கள் என்னவென்று அரசமைப்புமூலம் உணர முடிகிறது. அரசியல் சாசனம் ஏக போகத்துக்கு எதிரானது. அதனால்தான் பாஜக 24 மணி நேரமும் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. துரோணாச்சாரியார் ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டியதுபோல், பாஜக அரசாங்கம் இந்திய மக்களின் கட்டைவிரலை வெட்டுவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

மும்பை தாராவியை அதானிக்கு வழங்கியதன் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கட்டை விரலை வெட்டுகிறார்கள். இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையை அதானியிடம் ஒப்படைக்கும்போது, ​​நேர்மையாக உழைக்கும் நியாயமான வணிகர்களின் கட்டைவிரலை வெட்டுகிறார்கள். அக்னிவீர் திட்டம் மூலம் இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டுகிறார்கள். வினாத்தாள் கசிவு மூலம் மாணவர்களின் கட்டைவிரலை வெட்டுகிறார்கள். பாஜக அரசு துரோணாச்சாரியாராக செயல்படுகிறது. மத அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? பாஜக ஆட்சியில் பாலியல் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர்” எனக் கடுமையாகப் பேசினார்.