இந்தியா

சந்திரபாபு நாயுடு போராட்டத்துக்கு ராகுல் காந்தி நேரில் ஆதரவு

webteam

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வரும் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் அடுத்தகட்டமாக, டெல்லியில் அவர் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். 

அங்குள்ள ஆந்திர பவனில் இன்று இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. முன்னதாக மகாத்மா காந்தியின் நினை விடமான ராஜ்காட்டில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து உண் ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருடன் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உடனிருக்கின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நேரில் ஆதரவு தெரிவித்தார். 

பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்கு வந்து சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘’அந்திர மக்களுடன் நானும் நிற்கிறேன். என்ன மாதிரியான பிரதமர் இவர்? ஆந்திர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. மோடி, எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பொய்யை மட்டுமே சொல்கிறார். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை’’ என்றார்.