நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடியை கடுமையாக விமர்சித்தார். இந்திய விவசாயிகளின் நலன்களை பாதித்ததற்காக மோடி இந்தியாவை விற்றுவிட்டதாக குற்றம் சாட்டினார். ஜவுளித் தொழில் முடிவடைந்தது, எரிசக்தி பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(புதன்கிழமை) உரையாற்றினார். கடந்த வாரம் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் வெளியிடப்படாத புத்தகத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட பிறகு, அவரைப் பேச அனுமதிக்கவில்லை . இதனால் எதிர்க்கட்சிகள் பல நாட்களாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அவர் இன்று உரை நிகழ்த்தினார்.
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய ராகுல் காந்தி , பிரதமர் மோடி நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள். அமெரிக்காவின் விவசாயப் பொருட்களை இந்திய சந்தைகளில் அனுமதித்ததன் மூலம் விவசாயிகளின் நலன்களை நாசமாக்கியுள்ளீர்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், இந்தியாவின் ஜவுளித் தொழில் "முடிந்துவிட்டது" என்றும் அவர் குற்றம் சாட்டினார். வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் நமது எரிசக்தி பாதுகாப்பு முழுவதையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்து மொத்தமாக சரணடைந்துள்ளீர்கள். பாஜகவின் நிதிக் கட்டமைப்பைப் பாதுகாக்க பிரதமர் மோடி இந்தியர்களின் எதிர்காலத்தை விற்றுவிட்டார் என்று கடுமையாக சாடினார்.
நாங்கள் ஆட்சியில் இருந்து டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், முதலில் கூறுவது, சமமாக பேச வேண்டும், உங்களின் ஊழியர்களை போல் நடத்தக் கூடாது. இரண்டாவது எங்களின் எரிசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம். அடுத்து, எங்கள் விவசாயிகளை நாங்கள் பாதுகாப்போம் என்று கூறுவோம்.
புவிசார் அரசியல் மோதல்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவுக்கு சீனா, ரஷ்யா மற்றும் பிற சக்திகள் சவால் விடுகின்றன. டாலருக்கும், அமெரிக்க ஆதிக்கத்துக்கும் சவால் செய்யப்படுகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான போட்டியில், இந்திய தரவுகள் மிகவும் மதிப்புமிக்க ஒரு சொத்து என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா வல்லரசாக தொடர விரும்பினால், டாலரைப் பாதுகாக்க விரும்பினால், அதற்கான வழி இந்தியர்கள்தான்.
மக்கள்தொகை கூடுவது சுமை என்றும், பேரழிவு என்றும் பலர் சொல்கிறார்கள். ஆனால், மக்கள்தொகை தான் நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து. அது நமது பலம் என்றும் பேசினார்.