இந்தியா

நிர்பயாவின் குடும்பத்திற்கு உதவிய ராகுல் காந்தி!

நிர்பயாவின் குடும்பத்திற்கு உதவிய ராகுல் காந்தி!

webteam

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயாவின் குடும்பத்திற்கு பல விதங்களில் உதவியதாக, அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயா என்ற இளம்பெண் ஓடும் பேருந்தில் 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் தனது சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி மனமுடைந்த அவரின் சகோதரனுக்கு ராகுல் காந்தி பல அறிவுரைகளை வழங்கி உள்ளார். தற்போது நிர்பயாவின் சகோதரர் தனியார் விமான நிறுவனத்தில் பைலட்டாக சேர்ந்துள்ளார். இதற்கு மிக முக்கியமான காரணம் ராகுல் காந்தி தான் என்றும், பள்ளி படிப்பு முடித்த தன் மகனின் மேற்ப்படிப்பு செலவை ஏற்றுக்கொண்டு, அவனை மனதளவில் உற்சாகப்படுத்தி தேற்றியது ராகுல் தான் என்று நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் ராகுல் தங்களின் குடும்பத்திற்கு உதவியதை அரசியல் நோக்கத்திலும், தனிப்பட்ட முறையிலும் வெளியில் சொல்ல வேண்டாம் என்று தங்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, மாதம் ஒரு முறையாவது தங்களுடன் தொலைபேசியில் உரையாடி, தங்களின் குடும்ப சூழலை பற்றி கேட்டறிந்ததாகவும் நிர்பயாவின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். தற்போது வெளிப்படையாக இந்த உண்மையை வெளியில் கூறியுள்ள அவர்கள் ராகுல் மற்றும் சோனியாவிற்கு தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.