rahul gandhi x page
இந்தியா

“எதிரி பாகிஸ்தான் மட்டுமல்ல.. அந்த நாடும் தான்” - ஒவ்வொரு பாய்ண்ட் ஆக அடுக்கிய ராகுல் காந்தி!

மக்களவையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான விவாதத்தின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

Prakash J

நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் கடந்த இரண்டு நாட்களாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக, இன்று உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசுக்கு எதிராக வைத்தார்.

விமானப்படையின் தவறு அல்ல. இது மத்திய அரசின் தவறு!

ராகுல் காந்தி பேசுகையில், “இந்திய விமானப்படை விமானிகளின் கை கட்டப்பட்டிருந்தது. பாகிஸ்தான் விமானப்படை உட்கட்டமைப்பைத் தாக்க வேண்டாம் என இந்திய விமானிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டது ஏன்? இத்தகைய கட்டுப்பாடு காரணமாக இந்தியா போர் விமானங்களை இழந்தது. இதற்கு மோடி அரசே காரணம். இது விமானப்படையின் தவறு அல்ல. இது மத்திய அரசின் தவறு.

தீவிரவாத முகாம்களைத் தாக்கிய பிறகு, பாகிஸ்தானைத் தொடர்புகொண்டு மோதலைத் தீவிரபடுத்த விரும்பவில்லை என ஏன் இந்தியா தெரிவித்தது? இது இந்தியா சரணடைந்ததற்கு ஒப்பாகும். அரசியல்ரீதியாக போர் நடத்தும் தீர்மானம் இல்லை என்பதை காட்டும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை அமைந்தது" என்றார்.

”இந்திய வீரர்கள் அனைவரும் புலிகள்; அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குங்கள்”

தொடர்ந்து அவர், “இந்திரா காந்தி இருந்தபோது வங்கதேச போரில் ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தார்கள். ஒரு புதிய நாடு உருவானது. அமெரிக்க கடற்படையின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளி, அப்போதைய பிரதமர் வங்கதேசப் போரை நடத்தினார். இந்திரா காந்தி வலிமையுடன் செயல்பட்டார்.

ஒருவருடன் கைகுலுக்கும்போதே அவர் இந்தியப் படையின் வீரர் என்பது தெரிந்துவிடும்.

இந்திய வீரர்கள் அனைவரும் புலிகள். அந்தப் புலிகளுக்கு முழுச் சுதந்திரம் வழங்க வேண்டும். அரசியல் ரீதியாக முழு வலிமையுடன், இந்தியப் படைகளுக்கு முழுச் சுதந்திரம் அளிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும் முன்னரே எதிர்க்கட்சிகள் இந்திய படைகள் மற்றும் இந்திய அரசுடன் துணை நிற்பதாக தெரிவித்தோம். மிகவும் பெருமையுடன் நாம் ஒற்றுமையாக நின்றோம்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பிரதமரின் பிம்பத்தைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 29 முறை மோதலை நிறுத்தியதாக பேசியதையும் பிரதமர் மக்களவையில் மறுக்க வேண்டும்” என்றார்.

பாகிஸ்தான் அல்ல.. சீனா தான் முக்கிய எதிரி!

“போர் தொடங்கும்வரை பாகிஸ்தான் எதிரி என இந்தியா நினைத்தது; போர் தொடங்கிய பிறகுதான் இந்தியாவின் உண்மையான எதிரி சீனா என்று தெரிந்தது. போர் தொடர்பான பல முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா அளித்து உதவியது.

பாகிஸ்தானையும், சீனாவையும் பிரிக்கும் அளவுக்கு நம் வெளியுறவுக் கொள்கை இல்லை. இக்கட்டான சூழலை எப்படி கையாள்வது என்று தெரியாத நிலையில் அரசு உள்ளது. எனது அறிவுறுத்தல்களை கேட்டிருந்தால் இந்தியா 5 விமானங்களை இழந்திருக்காது; பாகிஸ்தான், சீன விமானங்களை ஒருங்கிணைக்க ஒரு மையமே இருக்கிறது. போரின் அடிப்படையே நமது பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு தெரியவில்லை” என்று ராகுல் பேசினார்.