rahul gandhi
rahul gandhi pt web
இந்தியா

“எந்தவொரு பிரதமரும் நாடாளுமன்றத்தில் இப்படி நடந்து கொண்டதில்லை” - ராகுல் காந்தி காட்டமான விமர்சனம்

PT WEB

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில் எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நேற்று பதிலுரை வழங்கினார். அதில், பிரதமர் மணிப்பூரைப் பற்றி பேசவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தன. எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின் பிரதமர் மணிப்பூர் பற்றி உரையாற்றினார். ஆனாலும், எதிர்கட்சிகள் தொடர்ந்து பிரதமரின் உரையின் மேல் விமர்சனம் வைத்து வருகின்றன.

Rahul Gandhi

”நாட்டின் பிரதமர் இப்படியெல்லாம் பேசுவாரா?”

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு இந்திய நாட்டின் பிரதமர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்களவையில் இப்படியெல்லாம் பேசுவாரா என நான் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பாரதமாதா கொலை செய்யப்பட்டார் என நான் பேசியதை பிரதமர் மோடி தவறாக திரித்து கூறுகிறார். நான் இப்போதும் சொல்கிறேன், மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்று பார்த்தேன், அங்கு நிகழ்ந்த விஷயத்தின் அடிப்படையில் சொல்கிறேன், அந்த மாநிலத்தில் பாரதமாதா கொலை செய்யதான் பட்டுள்ளார்.

”நகைச்சுவை செய்வதில் தான் நேரங்களை கழித்தார்”

மக்களவையில் வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. நெருப்பை பற்ற வைக்க வேண்டும், பிரிக்க வேண்டும், அதை வைத்து ஆட்சி செய்ய வேண்டும். இதைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களவையில் பேசியதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அவர் பெரும்பாலான நேரங்களை நகைச்சுவை செய்வதில் தான் கழித்தார். இரண்டு மணி நேரம் பேசிய உரையில் நகைச்சுவை தான் இருந்தது. ஒரு இந்திய நாட்டின் பிரதமரிடமிருந்து நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

மணிப்பூர் என்ற மிக சீரியசான விஷயம் குறித்து பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அதைப் பற்றி கவலை இல்லாமல் சிரித்து சிரித்து நகைச்சுவை செய்து கொண்டிருந்தார். ஜோக்குகள் சொல்கிறார், அவையில் இருந்தவர்களை சிரிக்க வைக்கிறார். இதற்கு முன்பு இவ்வளவு தீவிரமான ஒரு விஷயத்தை எந்த ஒரு பிரதமரும் இப்படி கையாண்டிருப்பாரா என்பது தெரியவில்லை.

”ராணுவத்தை ஏன் இன்னும் அனுப்பி வைக்கவில்லை”

பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். பிரச்சனையை முடிக்க அவர் விரும்பவில்லை. இந்திய ராணுவத்தை ஏன் இன்னும் அனுப்பி வைக்கவில்லை, மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டால் அதற்கு ஏதேதோ சிரிப்பு வர வைக்கும் விஷயங்களை சொல்லி சமாளிக்கிறார்.

RahulGandhi BJP

”எந்தவொரு பிரதமரும் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டு பார்த்ததே கிடையாது”

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்கள் அவையில் சிரித்து சிரித்து பேசிய விஷயங்கள் அனைத்தும் மணிப்பூர் மாநில பெண்களைப் பார்த்து, அவமானப்படுத்தப்பட்ட பெண்களைப் பார்த்து சிரித்ததாகவே நான் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள், பாஜகவின் வாஜ்பாய் மற்ற பிரதமர்களான தேவ கௌடா உள்ளிட்டோர் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு பிரதமரும் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டு பார்த்ததே கிடையாது.

”எங்கும் கண்டிராத துயரத்தை மணிப்பூரில் பார்த்தேன்”

குறைந்தபட்சம் பிரதமர் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்று இருக்க வேண்டும். அந்த மாநில மக்களை நேரில் சந்தித்து பேசி இருக்க வேண்டும். ஆனால் இதை எதையுமே செய்யவே இல்லை, இன்னும் சொல்லப்போனால் அதை செய்வதற்கான அறிகுறிகள் கூட அவரிடம் இல்லை. எனக்கு இந்திய ஆயுதப்படைகள் மீது முழு நம்பிக்கை உள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு அது இல்லை. அதனால் தான் இன்னமும் மணிப்பூர் மாநிலத்திற்கு ராணுவத்தை அனுப்பாமல் இருக்கிறார். என் அரசியல் அனுபவத்தில் எங்கும் கண்டிராத துயரத்தை மணிப்பூரில் பார்த்தேன். அதைத்தான் நாடாளுமன்றத்திலும் பேசினேன்.

RahulGandhi ManipurViolence

”ராணுவத்தை அனுப்பி முதலில் அமைதியை கொண்டு வர வேண்டும்”

பிரதமர் கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும். நான் மீண்டும் சொல்கிறேன். இந்தியாவுடைய கருத்தியலை பாஜக கொலை செய்து தான் விட்டது. நான் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்றேன். அங்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்த ஒரு அறிகுறியுமே தென்படவில்லை. கடுமையான வன்முறை தான் இருக்கிறது. அதனால் தான் அந்த மாநிலத்தில் ராணுவத்தை அனுப்பி முதலில் அமைதியை கொண்டு வர வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

”அவர்கள் என்னை தொலைக்காட்சியில் காட்ட விரும்பவில்லை”

தற்போது ராஜ்யசபா, லோக்சபா ஆகியவற்றின் தொலைக்காட்சிகளில் கட்டுப்பாடு அரசிடம் இருக்கிறது. அதனால் அவர்கள் என்னை காட்ட விரும்பவில்லை. அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. நான் எனது வேலையையும் சரியாக பார்த்திருக்கிறேன்.

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை கொண்டுவர எத்தனையோ வாய்ப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின் முன்பாக இருக்கிறது. ஆனால் அவற்றில் ஒன்றை கூட அவர் பயன்படுத்தவில்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு. எந்த ஒரு விஷயத்தையும் கூட அவர் செய்யட்டும் ஆனால் நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் மணிப்பூரில் உடனடியாக அமைதியை கொண்டு வாருங்கள்” எனக் கூறினார்.