காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றுள்ளார். அவரின் இதுவரையிலான அரசியல் பயணம் குறித்து தெரிந்துகொள்வோம்..
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும், நம்பிக்கை ஒளியாகவும் பார்க்கப்படும் ராகுல் காந்தி, நேரு குடும்பத்தில் பிறந்தவர் என்ற அங்கீகாரத்துடன் அரசியலில் படிப்படியாக வளர்ந்து வந்தவர். தந்தை ராஜீவ் காந்தி இறந்த பிறகு கட்சியில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவரால்தான் நிரப்ப முடியும் என்று பெரும்பாலான காங்கிரஸார் நம்பும் அளவுக்கு செல்வாக்குப் பெற்ற தலைவராக உருவெடுத்திருக்கிறார் ராகுல்.
ஏழைகளின் வீடுகளுக்கே சென்று உணவருந்துவது, விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவது போன்ற ராகுல் காந்தியின் தனித்துவமான அரசியல் நடவடிக்கைகள் ஒருபுறம் விமர்சனத்துக்கு உள்ளானபோதும், தேசிய அளவில் அவருக்கு விளம்பர வெளிச்சத்தை தருவதற்கும் அவையே காரணமாக அமைந்தன. 2004-ஆம் ஆண்டு தனது தந்தையின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் நேரடி அரசியல் களத்துக்கு வந்த
ராகுல் காந்தி, சில ஆண்டுகள் தொகுதிப் பணிகளை மட்டுமே கவனித்து வந்தார்.
2007-ம் ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ராகுல் காந்தியே முன்னின்று பரப்புரை மேற்கொண்டபோதும், வெறும் 22 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. அதே ஆண்டில், கட்சியின் பொதுச் செயலாளராகவும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நேர்காணல் நடத்தி, சிந்தனையாளர் குழுவை உருவாக்கியது, நாடு முழுவதும் உள்கட்சித் தேர்தலை நடத்தியது போன்றவை அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தன.
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிய வேளையில், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த வேண்டும் என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். அவர்களின் எண்ணம் நிறைவேறாவிட்டாலும், தம்மை தகுதி வாய்ந்த தலைவராக அடையாளப்படுத்திக் கொள்ள அந்தத் தேர்தல் ராகுல் காந்திக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆறே வாரங்களில் நாடு முழுவதும் 125 பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல், காங்கிரஸ்
கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 21 மக்களவைத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
ஆனால், 2012-ம் ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ராகுல் தலைமையிலான பரப்புரைக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோதி ரோமருடன் இந்துத் தீவிரவாதம் பற்றி உரையாடல் நடத்தியதாக விக்கிலீக்சில் வெளியான விவகாரம், லோக்பால் அமைப்பால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது என்று பேசியது என அவ்வப்போது கண்டனங்களுக்கு ஆளானபோதும், பெரிய அளவிலான சர்ச்சைகளில்
ராகுல் சிக்கியதில்லை.
இந்த சூழலில் 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தேசியக் காங்கிரசின் துணைத் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றார். 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பொறுப்புகள் தேடி வந்தநிலையிலும் அவர் ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது. 2013-ஆம் ஆண்டு, மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, குற்றவழக்குகளில் தொடர்புடைய எம்.பிக்களின் பதவியைக் காப்பாற்றும் வகையிலான அவசரச் சட்டத்தை கொண்டு
வந்தபோது அதனை தடுத்து நிறுத்தியவர் ராகுல்காந்தி. தான் சார்ந்துள்ள காங்கிரஸ் அரசின் அவசரச்சட்டத்தையே 'முட்டாள்தனமானது, கிழித்து எறியப்பட வேண்டியது' என வெளிப்படையாக ராகுல் பேசியது, அவரது அரசியல் வாழ்வில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சியின்போது, மானிய விலையில் ஆண்டுக்கு 9 சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி 12ஆக அதிகரிக்க குரல் கொடுத்தவர் ராகுல். 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பரப்புரையை ராகுல்காந்தி முன்னின்று நடத்தியபோதிலும் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது. அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம் என்றபோதிலும் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி செயல்படும் விதமே அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பது நிதர்சனம்.