இந்தியா

‘இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு ஏதுமில்லை’ - பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி

‘இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு ஏதுமில்லை’ - பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி

rajakannan

இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் பெற உதவும் வகையில் எந்த அறிவிப்பும் எதுவும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சுமார் 2 மணி 41 நிமிடங்கள் பட்ஜெட் வாசிக்கப்பட்டது. பட்ஜெட் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பட்ஜெட் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறிய போது, “நாடு முக்கியமாக சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னை வேலைவாய்ப்பின்மை. இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் பெற உதவும் வகையில் எந்த அறிவிப்பும் நான் பார்க்கவில்லை. நிறைய திட்டமிடல் உள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால், பொதுவான கொள்கை எதுவும் இல்லை. அரசு சிறப்பாக உள்ளதாக விவரிக்கிறது. திரும்ப திரும்ப நிறைய விஷயங்கள் வருகிறது. சலிப்பூட்டும் வகையில் உள்ளது. எல்லாம் பேசப்படுகிறது. ஆனால், எதுவும் நடைபெறவில்லை.

இது வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டாக இருக்கலாம். ஆனால் இதில் ஒன்றுமில்லை. அது வெற்றாகதான் இருந்தது” என்றார்.

மேலும், இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நம்முடைய இளைஞர்கள் வேலைவாய்ப்பை தேடுகிறார்கள். நாடாளுமன்ற பட்ஜெட் வரலாற்றில் நீண்ட நேரம் வாசிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சரி செய்வதற்கு எதுவும் இல்லை. பிரதமர் மற்றும் நிதியமைச்சர் இருவருக்கும் என்ன செய்வது என்பதற்கான வழி தெரியவில்லை” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.