இந்தியா

வயநாடு மக்கள் தொடர் உண்ணாவிரதம் - ராகுல் நேரில் ஆதரவு

webteam

வயநாடு மாவட்டத்தில் 10 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை அந்தத் தொகுதி எம்.பி.‌ ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

கேரளா மாநிலம் வயநாட்டிலிருந்து கர்நாடகாவை இணைக்கும் சுல்தான் பத்தேரி - குண்டல்பேட்டை சாலை பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்கிறது. அந்தப் பாதையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சுல்தான் பத்தேரி - குண்டல்பேட்டை சாலையில் நிரந்தரமாக போக்குவரத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது. அதனால், அந்தச் சாலை நிரந்தரமாக மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. 

இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கும் முடிவை கைவிடக் கோரி கடந்த 25ஆம் தேதி முதல் வயநாடு மாவட்ட இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்துள்ள நிலையில், வயநாடு தொகுதி எம்.பி. என்ற முறையில் ராகுல் காந்தி இன்று போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளதாகவும், சட்டரீதியாக பிரச்னை எதிர்கொள்ளப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.