இந்தியா

"வயநாட்டில் போட்டி ஏன்?" - ராகுல்காந்தி விளக்கம்

webteam

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தென்னிந்தியாவில் போட்டியிட வேண்டும் என்று இங்குள்ள காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடலாம் எனத் தகவல் வெளியானது. 

இதுபற்றி பேசிய ராகுல் காந்தி, “அமேதி, நான் இருக்கும் இடம். அங்கு என் பணி தொடர்ந்து இருக்கும். கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் இருந்து 2-வது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு முன்பும் காங்கிரஸ் மற்றும் பிற கட்சியை சேர்ந்த தலைவர்கள் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். பிரதமர் மோடியும் 2 தொகுதியில் போட்டியிட்டவர். நான் இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி முடிவு எடுக்கும்” எனக் கூறியிருந்தார். அதன்படி அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

இந்நிலையில், கேரளாவின் வயநாட்டில் இருந்து போட்டியிடுவது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “தற்போதைய அரசு தங்களை கருத்தில் கொள்ளவில்லை எனத் தென்னிந்திய மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் உள்ளது. நரேந்திர மோடி குறித்து தென்னிந்திய மக்கள் எதிர்ப்புணர்வு கொண்டுள்ளனர். நாட்டின் முடிவுகளில் தாங்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என அவர்கள் உணர்கின்றனர். எனவே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை தென்னிந்தியாவுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதனால்தான் கேரளாவிலிருந்து போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.