rahul gandhi rahul gandhi
இந்தியா

’தேர்தல் ஆணையம் தேச துரோகம் செய்துள்ளது..’ - ராகுல் காந்தி கடுமையான விமர்சனம்

எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீதான விமர்சனம் அதிகரித்துவரும் நிலையில், சமீபத்தில் வெளியான செய்திகள் பிரச்னையை மேலும் பெருதாக்கியுள்ளன..

Rishan Vengai

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் SIR நடவடிக்கையில் தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படலாம், வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் நிலையில், இரண்டு தேர்தல் ஆணையர்கள் 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, வாக்குத் திருட்டு தேசத்துரோகம் என ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டுகிறார்.

வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்கள், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து பட்டியலைத் திருத்துவதற்காக Special Intensive Revision எனப்படும் SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படக்கூடும் என்றும், SIR நடைமுறையில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

ECI

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் உள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக இன்று வெளியான தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பெயர்களைச் சேர்ப்பது, நீக்குவது, மீண்டும் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தசூழலில் எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணைய உள்மோதல்கள் குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் மற்றும் நமது அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதல் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வாக்குத்திருட்டை ஒருங்கிணைத்த பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை கூட்டாக சேர்ந்து தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளன என்றும் இதற்கான நீதி நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.