ராகுல் காந்தி விமர்சனம் pt web
இந்தியா

கோவா | இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு.. ராகுல்காந்தி விமர்சனம்!

கோவாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் அரசு தோல்வியடைந்துள்ளது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

PT WEB

கோவா தலைநகர் பனாஜியிலிருந்து 25 கிலோமீட்டரில் தூரத்தில் அர்போரா என்ற இடத்தில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் என்ற மிகப் பிரபலமான நைட் கிளப்பின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளியேறும் பகுதி மிகக்குறுகலாக இருந்ததே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

கோவா தீ விபத்து

இந்நிலையில், இந்த விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட கோவா முதல்வர் பிரசாந்த் சாவத், இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக இதுவரை நைட் கிளப் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பக்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

அதிகாலை நேரத்தில் நடந்த தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கும் நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் அரசு தோல்வியடைந்துள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கோவாவில் 25 பேரின் உயிரை பறித்த தீவிபத்து வேதனை அளிக்கிறது. இது சாதாரண விபத்து அல்ல. நிர்வாகம் மற்றும் பாதுகாப்பில் ஏற்பட்ட கிரிமினல் தோல்வி. விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வெளிப்படையான மற்றும் விரிவான விசாரணை நடத்துவதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.