இந்தியா

''தலைவரில் இருந்து உறுப்பினர்'': ட்விட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி

webteam

தன்னுடைய ட்விட்டர் பயோவில் 'காங்கிரஸ் தலைவர்' என இருந்ததை 'காங்கிரஸ் உறுப்பினர்' என ராகுல்காந்தி மாற்றியுள்ளார்

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தா‌ம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் ராகுல் கூறினார். மேலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்க போவதில்லை என்றும், எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

இந்நிலையின் தனது ராஜினாமா குறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தான் விலகுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பயோவில் காங்கிரஸ் தலைவர் என்பதை ராகுல்காந்தி நீக்கியுள்ளார். காங்கிரஸ் தலைவர் என இருந்ததை காங்கிரஸ் உறுப்பினர் என மாற்றியுள்ளார். அதாவது முன்னதாக ‘President Indian National Congress’ என இருந்த பயோவை தற்போது ‘Member of the Indian National Congress’ என மாற்றியுள்ளார்.