பீகாரில் ஆளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ராகுல் காந்தியும், நிதிஷ்குமாரும் இன்று சந்தித்து பேசினர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று சந்தித்துப் பேசினார். பீகாரில் ஆளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள லாலுவின் மகனும் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி பதவி விலக வேண்டுமென முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தி வருகிறார். ஆனால் லாலு தரப்பு இதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாட்னா விமான நிலையத்தில் லாலுவுக்கும் அவரது மனைவிக்கும் அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சலுகையை மத்திய விமான போக்குவரத்துத் துறை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் ராகுல் நிதிஷ் சந்திப்பில் தேஜஸ்வி விவகாரம் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.