இந்தியா

நாடு தழுவிய போராட்டம்: ராகுல், பிரியங்கா காந்தி கைது

நிவேதா ஜெகராஜா

தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உட்பட பல காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் விலைவாசி உயர்வை தடுக்கவும் உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்துசெய்யவும் கோரிக்கை வைத்து இன்று நாடு முழுவதும் காங்கிர1 கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. அப்போராட்டத்தில் `இந்தியா தற்போது ஜனநாயகத்தின் இறப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறது. சர்வாதிகாரத்திற்கு எதிராக நிற்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுகின்றனர்’ என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

போராட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி பேசுகையில், “ஜனநாயகத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் போராடுவதாலேயே எங்களது குடும்பம் குறிவைக்கப்படுகிறது. சமுதாயத்தில் முக்கிய பிரச்னைகளான விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மற்றும் வன்முறை போன்றவை குறித்து குரல் எழுப்பப்படக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் ஒரே நோக்கமாக இருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. நான்கு பேரின் சர்வாதிகாரமே நடைபெறுகிறது. நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை முறைகேடு குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை” எனத் தெரிவித்தார்.

இதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதே காரணத்துக்காக அக்கட்சியின் பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டுள்ளார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தின் பங்குகொண்ட பல காங்கிரஸ் தொண்டர்களும் கைதானது குறிப்பிடத்தக்கது.