தம்மை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற 7 வயது கேரள சிறுவனின் ஆசையை நிறைவேற்ற, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்வந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இம்முறை அமேதி தொகுதியைத் தவிர கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து, பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழலில் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது நந்தன் என்ற 7 வயது சிறுவன், ராகுல் புகைப்படத்தை தமது சட்டையில் ஏந்தியவாறு அவரை காண காத்திருந்துள்ளான் பலத்த பாதுகாப்பு காரணமாக, அவனால் ராகுலை சந்திக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமது வயநாடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, சிறுவன் நந்தனின் ஏக்கத்தை தாம் அறிந்ததாகவும், விரைவில் நேரில் சென்று அச்சிறுவனின் ஆசையை நிறைவேற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.