இந்தியா

மீண்டும் வருத்தம் தெரிவித்த ராகுல்காந்தி : நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்

webteam

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய விவகாரத்தில், தனது பேச்சுக்காக அவர் மீண்டும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் எனக் கூறிவிட்டதாக ராகுல் காந்தி பரப்புரையின்போது இம்மாத தொடக்கத்தில் பேசியிருந்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ராகுல் காந்தி திரித்துக் கூறியதாக கூறி பாஜக ‌எம்பி மீனாட்சி லேக்கி வழக்கு தொடர்ந்திருந்தார். 

அப்போது நீதிமன்ற உத்தரவு குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும் அவருக்கு இவ்விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் தன் பேச்சு குறித்து ராகுல் காந்தி மீண்டும் பிரமாண‌ பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென கடந்த வார‌‌ம் உத்தரவிட்டிருந்தனர். 

இதைத் தொடர்ந்து புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராகுல், உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டி மோடியை தவறாக பேசியதற்காக மீண்டும் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக எம்பி மீனாட்சி லேக்‌கியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறான நோக்கத்துடன் தொடரப்பட்டது என்பதால் அதை நிராகரிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில் ரஃபேல் சீராய்வு வழக்கில் புதிய பிரமாணப் பத்தி‌‌ரம் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்பதால் நாளை நடைபெறவிருக்கும் விசாரணையை ஒத்திவைக்கவேண்டும் என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.