வேலை வாய்ப்புகளில் சாதி, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதைவிட ஏழைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு கோரி மராத்தா இன மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, வேலை வாய்ப்புகளில் சாதி, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதைவிட ஏழைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அரசுப் பணிகள் குறைந்துள்ளதால் இட ஒதுக்கீடு முறை மூலம் வேலை வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும் என உறுதியாக கூறிவிட முடியாது என கட்கரி தெரிவித்தார். பிற்படுத்தப்பட்டோர் என்று கூறி இடஒதுக்கீடு கோருவது அரசியல் ஆதாயத்திற்கான செயல்பாடு என்றும் விமர்சித்தார். வேலைவாய்ப்பில் சாதி, மதம் பார்க்காமல் ஏழைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற வாதம் வலுப்பெற்று வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
உணவு, உடை இல்லாமல் தவிக்கும் ஏழைகளே அதிகம் பயன்பெற வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இப்பிரச்னைக்கு அரசியல் கட்சிகள் தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாதி, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ள சூழலில், ஏழை என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.