இந்தியா

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம் - அரண்மனைக்கு விரையும் உறவினர்கள்

JustinDurai

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்து உள்ளது.

96 வயதான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இதன் காரணமாக அவர் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து ஓய்வெடுத்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் தான், பிரிட்டன் பிரதமராக இருந்து ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனுக்கு நடந்த பிரிவுபசார விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த விழாவில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கும் லிஸ் டிரஸ்சையும் சந்தித்து இருந்தார்.

இந்தச் சூழலில் இப்போது பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மகாராணி எலிசபெத் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''இன்று காலை ராணியின் உடல்நிலையை சோதித்ததைத் தொடர்ந்து, ராணியின் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து அச்சம் அடைந்துள்ளனர். மேலும், அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். பல்மோரளில் இருக்கும் கென்சிங்டன் அரண்மனையில் ராணி தற்போது தங்கியுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், ''பக்கிங்காம் அரண்மனையில் இருந்து இன்று மதியம் வெளியான ராணியின் உடல்நலம் குறித்த தகவலால் நாடே கவலையில் உள்ளது. நானும் மற்றும் நாட்டு மக்களும் ராணிக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆறுதலாக இருப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ராணியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரது நான்கு பிள்ளைகளும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்திருப்பதாகவும், இதுகுறித்து நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் அளித்திருப்பதாகவும் லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் படிக்க: கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளை இணைத்துக்கொள்ள ரஷ்யா திட்டம் - நவம்பரில் தீர்மானம்?