செய்தியாளர் - M.மீரா
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான குவால்காம் (Qualcomm), தனது செலவுகளைக் குறைத்து வணிகத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையாகப் பெரிய அளவில் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சுமார் 3,600 ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் உலகம் முழுவதும் குவால்காம் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 52,000 ஊழியர்களில் 7 சதவீதம் பேரை, அதாவது சுமார் 3,600 பேரை பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி என்.சி.ஆர் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் குவால்காம் நிறுவனத்தின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 20,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 1000 பேர் வேலையை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் மூத்த பொறியாளர்கள் முதல் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வரும் ஜனவரி மாதத்தில் அடுத்தகட்ட ஆட்குறைப்பு நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கு 3 மாதச் சம்பளமும், பணியாற்றிய ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு மாதச் சம்பளமும் இழப்பீடாக வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவாகப் பணிநீக்க ஆவணங்களில் கையெழுத்திட்டால் கூடுதலாக ஒரு மாதச் சம்பளமும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மொபைல் வருவாயில் ஏற்பட்ட 25 சதவீத சரிவு, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சென்டர் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கான தேவை ஆகியவை இந்த ஆட்குறைப்புக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
எனினும், இந்தப் பணிநீக்க நடவடிக்கை குறித்து குவால்காம் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.