அதிர்ஷ்டம் என்று கூறி மலைப்பாம்பின் மீது காசை எறியும் மக்களை கண்டு, வன விலங்கு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பை, பைகுலாவில் மிருக காட்சி சாலை இருக்கிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் வருகின்றனர். இங்கு ஒரு இடத்தில் மலைப்பாம்புகள் இருக்கின்றன. இவற்றுக்காக செயற்கை பாறைகள் உருவாக்கப்பட்டு அதில் பாம்புகள் படுத்துக்கிடக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு சமீபத்தில் வந்த வன விலங்கு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனென்றால் படுத்திருக்கும் மலைப்பாம்புகளை சுற்றி சில்லறை காசுகள் சிதறிக்கிடந்தன. எப்படி இது என பார்த்தால், அப்போதும் சிலர் காசுகளை வீசுவது தெரிந்தது. அவர்களை நிறுத்தி, ’ஏன் இப்படி காசை எறிகிறீர்கள்’ என்று அதிகாரிகள் கேட்டனர். அதற்கு, ‘காசை மலைபாம்பு மீது எறிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வாழ்க்கை சூப்பராக இருக்கும்’ என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அதிகாரிகள், ’அப்படி ஏதும் இல்லை. இனி இப்படி காசை எறியக்கூடாது’ என்று எச்சரித்து அவர்களை அனுப்பினர்.
‘பாம்பின் மீது காசை எறிந்து துன்புறுத்துகிறார்கள். அப்படி செய்யக்கூடாது என்று சொல்வதற்கு கூட அங்கு ஆளில்லை. இதுபற்றி மிருகக்காட்சி சாலை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம்’ என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.