ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ’புஷ்பா 2’ பிரீமியர் காட்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 வயது பெண் உயிரிழந்து, அவரது 8 வயது மகன் காயமடைந்த சம்பவத்தில், அல்லு அர்ஜுன் உட்பட 23 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை ஏற்று, அனைவரையும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி, விசாரணையை ஜூலை 6க்கு ஒத்திவைத்துள்ளது.
செய்தியாளர்; வெற்றிச்செல்வி
2024 டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில், ’புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சி ஒளிபரப்பப்பட்டது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்கு ரசிகர்கள் பெருமளவில் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 35 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய 8 வயது மகனும் கூட்டநெரிசலில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். ’புஷ்பா’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்வையும் உண்டாக்கியது. அல்லு அர்ஜூனை பார்க்கச்சென்ற ரசிகை ஒருவர், மகனுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டதோடு, உயிரையும் பறிகொடுத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சிக்கட்டப்பள்ளி காவல் நிலைய காவல்துறையினர், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அல்லு அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்தனர். அதற்கு அடுத்தநாளே அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு அவர் வெளியே வந்தார். ஹைதராபாத் காவல்துறையினர், கடந்த 2025 டிசம்பரில் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உள்ளிட்டோர் முதல் 10 குற்றவாளிகளாகவும் அல்லு அர்ஜுன் 11ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. திரைப்பட படப்பிடிப்புகளால் நேரில் ஆஜராக முடியாத நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் காணொளி காட்சி மூலம் ஆஜரானார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் மேலும் இருவர் ஆஜராகவில்லை. மற்றவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், ’புஷ்பா 2’ கூட்ட நெரிசல் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.