இந்தியா

உத்தராகண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் புஷ்கர் சிங் தாமி

நிவேதா ஜெகராஜா

உத்தராகண்டின் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக் கொள்கிறார்.

டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் புஷ்கர் சிங் தாமியுடன், 10 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா தலைவர் மதன் கவுசிக் தெரிவித்துள்ளார். இன்று பதவியேற்கும் அமைச்சர்களில் பெரும்பாலானோர் புதியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அசாம், உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக மதன் கவுசிக் கூறியுள்ளார். பதவியேற்பு விழாவில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும்வகையில் ஏற்பாடுகளும், பல்லடுக்கு பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக உத்தராகண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57 தொகுதிகளை பாஜக கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவிவந்தது. இதனால் ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சியினர் கடும் விமர்சனத்தை பாஜக மேல் வைத்து வந்தது. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், குறிப்பாக உத்தராண்ட் மற்றும் கோவாவில் நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அம்மாநிலங்களின் முதல்வர்களாக முறையே புஷ்கர் சிங் தாமி, பிரமோத் சாவந்த் நேற்று முன்தினம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.