பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் - ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஷம்பு மற்றும் கனெளரி பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, பஞ்சாப்பில் போராடி வரும் விவசாயிகளுடன் பிப்ரவரி 14ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப் – ஹரியானா எல்லையான கனெளரியில், பஞ்சாப் விவசாயச் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் (வயது 70) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
அவரது உடல்நிலை மோசமடைந்தபோதிலும் சிகிச்சைக்கு மறுத்து போராட்டத்தை தொடர்ந்து வந்தார். உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்க அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அவர் மருத்துவச் சிகிச்சையை ஏற்காமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலையும் மத்தியக் குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன்படி, விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து, தல்லேவால் மருத்துவச் சிகிச்சைகளை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என தல்லேவால் தெரிவித்துள்ளார். இதனால், அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 55ஆவது நாளாக தொடர்கிறது. மேலும், அவருக்கு ஆதரவாக 10 விவசாயிகள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே 111 விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளது.