இந்தியா

பஞ்சாப் டூ டெல்லி: ரிவர்ஸ் கியரில் டிராக்டர் ஓட்டிச் செல்லும் விவசாயி - வைரல் வீடியோ

பஞ்சாப் டூ டெல்லி: ரிவர்ஸ் கியரில் டிராக்டர் ஓட்டிச் செல்லும் விவசாயி - வைரல் வீடியோ

webteam

டெல்லியில் நாளை நடக்கும் டிராக்டர் பேரணியில் பங்கேற்க விவசாயி ஒருவர் தனது டிராக்டரை ரிவர்ஸ் கியரில் இயக்கி பின்னோக்கியே செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

மத்திய அரசே இந்த சட்டத்தை 18 மாதங்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்தது. அதையும் விவசாயிகள் நிராகரித்தனர். சர்ச்சைக்குரிய மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக நிற்கிறார்கள்.

அந்த வகையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி நாளை சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் டெல்லி சென்று பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் டிராக்டர்களுடன் உத்திரபிரதேசம் - டெல்லி எல்லையில் உள்ள காஜிபூருக்கு விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர்.

அதன்படி பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் நாளை பேரணியில் பங்கேற்பதற்காக தனது டிராக்டரை ரிவர்சில் இயக்கிக்கொண்டு டெல்லிக்கு செல்கிறார். மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரிவர்ஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இவ்வாறு செல்வதாக விவசாயி தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.