சிட்காரா PTI
இந்தியா

‘மாணவிகள் மாயம்’, ‘பாலியல் வன்கொடுமை’.. ஒரே மாதிரி வதந்திகளால் பற்றி எரிந்த 2 பல்கலைக்கழகங்கள்!

140 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய உறுதிப்படுத்தப்படாத வதந்திகளே முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.

Prakash J

பஞ்சாப்பில் இரு தனியார் பல்கலைக்கழகங்களில், சமூக வலைதள வதந்திகளால் அடுத்தடுத்த இரவுகளில் (செப்டம்பர் 25 மற்றும் 26) பெரும் மாணவர் போராட்டமும் வன்முறையும் வெடித்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்கலைகழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதுடன், தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 140 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள சிட்காரா பல்கலைக்கழகம் மற்றும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் ஆகிய இரு தனியார் பல்கலைக்கழகங்களில், சமூக வலைதள வதந்திகளால் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய அடுத்தடுத்த இரவுகளில் மாணவர் போராட்டமும் வன்முறையும் வெடித்தன. ராஜ்புரா அருகே உள்ள சிட்காரா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 25-ஆம் தேதியும், ஜலந்தரின் தென்கிழக்கில் (ஃபக்வாராவில்) அமைந்துள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU) செப்டம்பர் 26 மற்றும் 27-ஆம் தேதிகளிலும் கலவரம் நடந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிட்காரா Protest

கடந்த செப்.25ஆம் தேதி, சிட்காரா பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியில் இரு மாணவிகள் மாயமானதாகவும், அலறல் சத்தங்கள் கேட்டதாகவும், பேய் தொடர்பான வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, அன்றைய நள்ளிரவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு நிர்வாகத்திடம் விளக்கம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறியதில் வளாகச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையே, காவல்துறை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து, எந்தவொரு மாணவியும் மாயமாகவில்லை என்றும் தற்கொலை எதுவும் நடக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியது. மேலும், இந்த வன்முறை காரணமாக முன்னெச்சரிக்கையாக அக்டோபர் 1 வரை வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், சிட்காரா சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் (செப்டம்பர் 26 சனிக்கிழமை இரவு), LPU பெண்கள் விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மற்றொரு சமூக வலைதள தகவல் பரவியது. இதையடுத்து, மாணவர்கள் ஜலந்தர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையை (NH-44) மறித்து 15 மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை தடியடி நடத்தியது.

பின்னர் நடைபெற்ற விசாரணையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் விடுதி சோதனைகளில் பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்தது. இருப்பினும் மாணவர் பிரதிநிதிகளுடன் இணைந்து சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பல்கலைக்கழகத்திற்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 140 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய உறுதிப்படுத்தப்படாத வதந்திகளே முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. எனினும், இவிவிவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.