இந்தியா

குருத்வாரா கோயிலுக்கு சென்ற பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மீது வழக்குப் பதிவு

ஜா. ஜாக்சன் சிங்

பஞ்சாபில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரபல பாடகர் சுப்தீப் சிங் சித்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நாளை (பிப்.20) தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பு அங்கு பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, பஞ்சாபில் உள்ள மன்சா பகுதியில் உள்ள குருத்வாரா கோயிலுக்கு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேற்று சென்று வழிபட்டார். அவருடன் பன்சா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், பிரபல பாடகருமான சுப்தீப் சிங் சித்துவும் உடன் சென்றிருந்தார். இந்நிலையில், கோயில் வழிபாட்டை முடித்துவிட்டு இருவரும் அந்தப் பகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, வேட்பாளர் சுப்தீப் சிங் சித்து ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.