இந்தியா

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் இன்று பதவியேற்பு

JustinDurai
பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் இன்று காலை பதவியேற்றுக் கொள்கிறார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, முதலமைச்சர் பதவியை அமரிந்தர் சிங் திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன.
இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 58 வயதான சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் ட்விட்டரில் தகவல் வெளியிட்டார். இதன் மூலம் அம்மாநிலத்தின் முதல் பட்டியலினத்தை சேர்ந்த முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
முதலமைச்சர் பதவிக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன், சரண்ஜித் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து திங்கள் கிழமை காலை முதலமைச்சராக அவர் பதவியேற்கவுள்ளார். புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங்-க்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்த்வா பெயர் முன்னிலையில் இருந்தது. பின்னர் சரண்ஜித் சிங் சன்னியின் பெயர் அறிவிக்கப்பட்டதும், அதை தாம் மனதார வரவேற்பதாக சுக்ஜிந்தர் சிங் தெரிவித்தார். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரண்ஜித் சிங், மாநிலத் தலைவர் சித்துவுக்கு நெருக்கமானவர் என்றும், அமரிந்தர் சிங்கை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.