இந்தியா

பஞ்சாப் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி - அசுத்தமான ஆற்று நீரை குடித்ததால் வந்த வினை?

JustinDurai

அசுத்தமான ஆற்று நீரை பருகியதால்தான் பகவந்த் மானுக்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று  வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் பகவந்த் மான் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டார். வயிற்றுப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பகவந்த் மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அசுத்தமான ஆற்று நீரை அருந்தியதால்தான் பகவந்த் மானுக்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று  வெளியாகியுள்ளது.  

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த 17ஆம் தேதி வெளியாகியிருந்த வீடியோ ஒன்றில்,  முதல்வர் பகவந்த் மான் ஒரு ஆற்றிலிருந்து தண்ணீரை டம்ளரில்  எடுத்து அப்படியே குடிக்கிறார். இதனால், கழிவுநீர் கலந்துவரும் அந்த ஆற்று தண்ணீரை பருகியதன் விளைவாகவே பகவந்த் மானுக்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


ஆறுகள் மற்றும் வடிகால்களை சுத்தம் செய்ய மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை தொடங்குவதாக பஞ்சாப் அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 17ஆம் தேதி சுல்தான்பூர் லோதியில் உள்ள புனித நதியின் 22வது ஆண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் பகவந்த மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பின்பேரில் சென்ற முதல்வர் பகவந்த் மான், ஆற்று தண்ணீரை பருகியதுடன் இந்த வாய்ப்பைப் பெற்றதற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்கலாமே: `2019-க்குப் பின் எந்த காஷ்மீர் பண்டிட்டும் இடம்பெயரவில்லை’- நாடாளுமன்றத்தில் அரசு பதில்