இந்தியா

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ராஜினாமா?

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ராஜினாமா?

Sinekadhara

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி இன்று மாலை 5 மணிக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறது. பஞ்சாபில் புதிய முதல்வரை நியமித்து பேரவைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிருப்தியில் உள்ள அமரிந்தர் சிங் முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே பஞ்சாபில் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிப்பதற்கு அமரிந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மாநில முதல்வரின் எதிர்ப்பை மீறி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஒப்புதலுடன் சித்து நியமிக்கப்பட்டார். இதனால் முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. சித்து மாநில காங்கிரஸ் தலைவரானது முதல் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவரது ஆதரவாளர்களாக செயல்படுகின்றனர். இதனால் அமரிந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற காங்கிரஸ் மேலிடத்துக்கு சித்து ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் எதிர்ப்பு அதிகரித்து வரும் சூழலில் பதவி விலக அமரிந்தர் சிங் திட்டம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.