ஏப்ரல் 1 ஆம் தேதி, நாளை முதல் பஞ்சாபில் உள்ள பெண்கள் மாநிலத்திற்குள் உள்ள அனைத்து அரசு பொது பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்திருக்கிறது.
பஞ்சாப் அமைச்சரவை இந்த திட்டத்திற்கு முறையான ஒப்புதலை வழங்கியிருக்கிறது, மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை மார்ச் 5-ம் தேதி மாநில சட்டமன்றத்தில் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், “ஏப்ரல் 1 முதல் மாநில போக்குவரத்து பேருந்துகளில் பஞ்சாபின் அனைத்து பெண்கள் / சிறுமிகளும் இலவசமாக பயணிக்க எங்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் பெண்களை மேலும் மேம்படுத்துவதற்கான வலுவான படியாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். ” எனத் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் 1.31 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள். அவர்கள் இப்போது பஞ்சாப் சாலைவழி போக்குவரத்துக் கழகம், பஞ்சாப் சாலைவழிப் பேருந்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் இயக்கப்படும் நகரப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க முடியும்.