இந்தியா

ஊரடங்கை மீறியதால் தண்டனை: 500 முறை 'I am sorry' எழுதிய வெளிநாட்டினர்!

webteam

ஊரடங்கை மீறி சாலையில் நடமாடிக் கொண்டிருந்த வெளிநாட்டினர் 10 பேருக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகை, மருந்து, பால் ஆகியவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், டாஸ்மாக் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. தேவையின்றி சாலையில் நடமாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் ஊரடங்கை மீறி சாலையில் நடமாடிக் கொண்டிருந்த வெளிநாட்டினர் 10 பேருக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேரும் '' நான் ஊரடங்கை பின்பற்றவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்'' என்பதை ஆங்கிலத்தில் ஒவ்வொருவரும் 500 முறை எழுதியுள்ளனர்.

இந்த நூதன தண்டனைக்கு பிறகு கடுமையான எச்சரிக்கையுடன் அவர்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்