கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணத்திற்கு ‘மருத்துவ அலட்சியம்’ தான் காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டுவதால், புனித்தின் மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், தனது 46 வது வயதில் மாரடைப்பால் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத்தொடந்து "மருத்துவ அலட்சியம்" தான் புனித்தின் மரணத்துக்கு காரணம் என்று பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியதை அடுத்து அவரது குடும்ப மருத்துவர் ரமணா ராவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் பெங்களூரு நகர காவல்துறை, “சதாசிவநகரில் உள்ள டாக்டர் ரமணா ராவின் வீடு மற்றும் கிளினிக்கிற்கு வெளியே ஒரு கேஎஸ்ஆர்பி படைப்பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தவிர்க்க தீவிர ரோந்து மூலம் இந்த பகுதிகளுக்கு அருகிலுள்ள நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று கூறியிருக்கிறது.
புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ரமணா ராவ் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்ஸ் அசோசியேஷன் (PHANA) அவர்களுக்கு பாதுகாப்பு கோரியதை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.