இந்தியா

“இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் நிவாரணம்”  - முதல்வர் பட்னாவிஸ்

webteam

புனே அருகே அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 17 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில், நேற்று காலை முதல் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், புனேவில் கடும் மழை காரணமாக சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.    

புனே அருகிலுள்ள கோந்தவா என்ற பகுதியில், தலாப் மசூதி அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் அருகே, குடிசை பகுதியும் இருக்கிறது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து, குடிசை பகுதியில் விழுந்தது. இதில், 4 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயமடைந்துள்ளனர். 

தகவலறிந்து விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்நிலையில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 17 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், புனேவில் நடைபெற்ற விபத்து மிகுந்த வருத்ததை தருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு புனே கலெக்டருக்கு உத்திரவிட்டிருப்பதாகவும் இதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.