இந்தியா

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கணவர்: ராணுவத்தில் இணைந்த மனைவி

jagadeesh

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 2018 இல் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி ராணுவத்தில் இணைந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018 இல் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் கொல்லப்பட்டார். அவரது தியாகத்தை பெருமைப்படுத்தும்விதமாக அவருக்கு 2019 ஆம் ஆண்சி ஷவுர்யா சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். ஆனால் இந்த விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு காரியத்தை செய்திருக்கிறார் உயிரிழந்த ராணுவ வீரர் மனைவியான நிக்கிதா கவுல்.

ஆம் நக்கிதா கவுல் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சிகளை முடித்து இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜென்ரல் ஒய்.கே. ஜோஷியிடம் ஸ்டார்களை வாங்கியுள்ளார். இதனை பெருமையாக ராணுவ அமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் அந்தப் பதிவில் வீடியோவையும் இணைத்துள்ளது. அதில் ராணுவ உடையில் கம்பீரமாக நடந்து வரும் நிக்கிதா ஸ்டார்களை தனது தோளில் பெற்றுக்கொள்கிறார்.

திருமணமான 9 மாதங்களில் தனது கணவரான மேஜர் சங்கரை இழந்த நிக்கிதா அதனால் சோர்ந்துவிடவில்லை. உடனடியாக ராணுவத்தில் சேர்வதற்கான வேலைகளில் இறங்கினார். முதலில் ராணுவத்தில் சேர்வதற்கான தகுதித் தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்ற அவர் நேர்முக தேர்விலும் தகுதிப்பெற்றார். இதனையடுத்து நிக்கிதா சென்னையில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் தன்னுடைய பயிற்சியை தொடங்கினார். இப்போது ராணுவ அதிகாரியாக கணவரைப் போலவே தேசத்துக்கு சேவையாற்ற தொடங்கினார் நிக்கிதா கவுல்.